search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர்கள் மறுப்பு"

    ஆந்திராவில் துப்பாக்கி சூட்டில் பலியான திருவண்ணாமலை தொழிலாளியின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ள உறவினர்கள் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வலியுறுத்தி உள்ளனர். #RedSandersSmuggling
    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் கொல்லப்பள்ளி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய கும்பல் மீது கடப்பா மாவட்டம் ரெயில்வே கோடூர் வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே உள்ள கானமலை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி காமராஜ் (வயது 53) என்பவர் பலியானார். அவருடன் வந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    துப்பாக்கிச்சூட்டில் பலியான காமராஜின் பிணத்தை ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    தகவல் அறிந்ததும், பிணத்தை வாங்குவதற்காக காமராஜின் மனைவி காமாட்சி, மகன்கள் ராமராஜ், சசி மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுதனர்.

    அவர்களிடம், ஸ்ரீகாளஹஸ்தி புறநகர் போலீசார், பிரேதப் பரிசோதனை முடிந்து விட்டதாகவும், உடனடியாக பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி உள்ளனர். காமராஜ் இறந்ததில் சந்தேகம் இருப்பதாகவும். மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார், காமராஜின் உறவினர்களை தாக்கியும், ‘பூட்ஸ்’ காலால் எட்டி உதைத்தும், பிணத்தை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது காமராஜின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    காமராஜ் உடலை வாங்க மறுத்ததால் அவரது உடல் காளஹஸ்தி ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காமராஜின் மகன்கள் ராமராஜ், சசி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்களின் தந்தை காமராஜ் சென்னையில் கட்டிட வேலைகளுக்கும், கேரளாவில் கூலி வேலைக்கும் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிட வேலைக்குச் செல்வதாக தான் வீட்டில் கூறி விட்டுச் சென்றார். ஆனால், திருவண்ணாமலை போலீசார் எங்களின் தந்தை காமராஜ் ஆந்திர வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அந்தத் தகவலை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த நாங்கள் அன்று இரவே ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தோம். அங்கிருந்த ஸ்ரீகாளஹஸ்தி புறநகர் போலீசார் எங்களிடம் அவசர அவசரமாக கையெழுத்துப் பெற்றுக்கொண்டு பிணத்தை உடனே எடுத்துச் செல்ல வேண்டும் என வற்புறுத்தினர். எங்கள் தந்தையின் சாவில் மர்மம் உள்ளது.

    எங்களுக்கு தகவல் வந்தது மதியம் 2 மணிக்கு, ஆனால் அவர் இறந்ததற்கான முதல் தகவல் அறிக்கை போலீஸ் நிலையத்தில் அதிகாலை 2.30 மணிக்கு தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்வதற்கு முன்பாகவே எங்களின் தந்தையை பிடித்து, அவரிடம் பெயர், ஊர் விவரம் போன்ற தகவல்களை சேகரித்துக் கொண்டு அதன் பிறகு சுட்டுக் கொன்றார்களா அல்லது இறந்தவரே போலீசாரின் முன் தோன்றி முகவரியை சொன்னாரா? எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

    எங்களின் தந்தையை பிடித்துச் சென்று, வேண்டும் என்றே வனத்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், போலீசார் எங்களின் கோரிக்கையை ஏற்காமல் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    காமராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மருமகன் அய்யப்பன் (வயது 30) நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் புகார் மனு அளித்தார்.

    அதில் எனது மாமனாரை அதிரடிப்படையினர் கொடுமையான முறையில் சித்ரவதை செய்து மனித உரிமைகள் மீறும் வகையில் செயல்பட்டு துப்பாக்கியில் சுட்டு கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

    மேலும் எனது மாமனார் எப்படி இறந்தார் என்ற விவரத்தை கூறாமலும், இறந்தவரின் உடலில் உள்ள தடயங்களை மறைக்கும் வகையில் எங்களிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் பிரேத பரிசோதனை செய்தும், நாங்கள் மலைவாழ் பழங்குடி இன மக்கள் என்பதால் மிரட்டி உண்மையை மறைத்து விடலாம் என்ற நோக்கத்தில் ஆந்திரா போலீசார் முயற்சித்து வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.  #RedSandersSmuggling
    தூத்துக்குடி கலவர வழக்கில் கைதாகி பாளை சிறையில் மர்மமாக இறந்த‌ வாலிபரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தை சேர்ந்த பரத்ராஜா (வயது36) என்பவர் தூத்துக்குடியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி, பாளை சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இவர் கடந்த 23-ந் தேதி நடைபெற இருந்த அவரது தம்பி தனசேகரன் திருமணத்துக்காக 7 நாட்கள் பரோலில் வெளி வந்திருந்தார்.

    இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலைக் கெதிரான போராட்டத்தில் பரத்ராஜா ஈடுபட்டதாக கூறி 23-ந்தேதி போலீசார் கைது செய்து அழைத்து சென்ற‌னர். அங்கு விசாரணை என்கிற பெயரில் பரத்ராஜாவை போலீசார் தாக்கியதாக தெரிகிறது. பின்னர் பரத் ராஜாவை பாளை சிறையில் அடைத்தனர்.

    போலீசார் தாக்கியதில் பரத்ராஜா காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த 30-ந்தேதி சிறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்த‌னர். இதையடுத்து பரத்ராஜாவின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

    பரத்ராஜா சாவில் சந்தேகம் உள்ளது. போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்தார். எனவே சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பரத்ராஜா குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கேட்டு அவரது உறவினர்கள் பரத்ராஜாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இன்று 5-வது நாளாக பரத்ராஜாவின் உடல் வாங்கப்படவில்லை. தொடர்ந்து அவரது உறவினர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 2 பேரின் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் தடுத்ததால் மோதல் உண்டானது.

    அப்போது ஏற்பட்ட கலவரம் காரணமாக போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100- க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.

    இதில் சண்முகம் (38), செல்வசேகர் (42), கார்த்திக் (20), கந்தையா (58), காளியப்பன் (22), ஸ்னோலின் (17), தமிழரசன் (42) ஆகிய 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

    இந்த நிலையில் 7 பேரின் உடல்களையும் டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தலைமையில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையில், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர், நீதித்துறை நடுவர்கள் முன்னிலையில் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

    உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி இந்த பிரேத பரிசோதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை 2 மணி வரை 7 பேரின் உடல்களும் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மீதமுள்ள 6 பேரின் உடல்க‌ளும் கோர்ட்டு உத்தரவுப்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

    பிரேத பரிசோதனை முடிந்த சண்முகம், கார்த்திக், செல்வசேகர் ஆகிய 3 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்று காலை காளியப்பன், கந்தையா ஆகியோரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஸ்னோலின், தமிழரசன் ஆகியோரது உடல்களை பெற அவர்களது உறவினர்கள் மறுத்து விட்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும், இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ள‌னர்.

    ஸ்னோலின், தமிழரசன் உடலை அவர்களது உறவினர்கள் இன்றும் வாங்கவில்லை. அவர்களின் உறவினர்கள் யாரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வரவில்லை. இதையடுத்து அவர்களிடம் கலெக்டர் சந்தீப்நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மற்றும் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை 2 பேரின் உடல்களையும் வாங்கப்போவதில்லை என 2 பேரின் உறவினர்கள் உறுதியாக தெரிவித்து விட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் மறுபிரேத பரிசோதனை முடிந்த நிலையில் ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 2 பேரின் உடல்களும் பிணவறையில் பாதுகாக்கப்படுகிறது.

    மேலும் பிரேத பரிசோதனை செய்யப்படாத அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித்குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஒரு வாரத்துக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×